கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் திரண்ட பெண்கள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் காரங்காடு கிராம பெண்கள் திரளாக வந்து மனுஅளித்தனர்.
ராமநாதபுரம்,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். திருவாடானை அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் தண்ணீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– கடற்கரையோரம் அமைந்துள்ள எங்கள் கிராமத்தில் நல்ல தண்ணீர் என்பது கடந்த பல ஆண்டுகளாக கனவாகவே இருந்து வருகிறது.
நிலத்தடி நீர் கடும் உப்பாக உள்ளதால் எந்த பயனும் இல்லை. இதன்காரணமாக நாங்கள் அனைத்து உபயோகத்திற்கும் ரூ.10 வீதம் ஒரு குடம் தண்ணீர் டிராக்டரில் கொண்டுவருபவர்களிடம் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். எங்களின் மீன்பிடி தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி தண்ணீருக்காகவே செலவிட்டு வருகிறோம். காவிரி குடிநீர் திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அருகில் உள்ள முள்ளிமுனை, மணக்குடி பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. அரைகிலோ மீட்டர் தூரம் உள்ள எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இந்த குறையை நிவர்த்தி செய்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை கூறியதாவது:– காரங்காடு கிராமத்தில் ரூ.21 லட்சம் செலவில் ஆயிரத்து 320 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. உப்புநீரை குடிநீராக்கும் எந்திரம் பழுதடைந்துபோனதால் ரூ.20 லட்சத்தில் புதிய எந்திரம் வாங்கி பொருத்தப்பட உள்ளது. 15 நாட்களில் குடிநீர் பிரச்சினை தீர்ந்துவிடும். இதுதவிர, முள்ளிமுனையில் இருந்து தனியாக குழாய் அமைத்து காவிரி குடிநீர் கொண்டுவர பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.