நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியதால் சர்ச்சை பா.ஜனதா கண்டனம்


நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியதால் சர்ச்சை பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:03 AM IST (Updated: 21 Aug 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மந்திரி எச்.டி.ரேவண்ணா, பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

குடகு, தட்சிண கன்னடா, ஹாசன் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா ராமநாதபுராவில் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார்.அப்போது அந்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் கொடுக்காமல், அவர் தூக்கி வீசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் மந்திரி எச்.டி.ரேவண்ணாவை கண்டித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி. நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

குடகு உள்பட சில மாவட்டங்களில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா ராமநாதபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மந்திரி எச்.டி.ரேவண்ணா பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் எடுத்து வீசி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். ஒரு மந்திரி இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல.

முதல்-மந்திரி காரில் பயணம் செய்து மக்களை சேதங்களை ஆய்வு செய்வதற்கு பதிலாக ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிடுகிறார். மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான அக்கறையை காட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு பெயரளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்வது சரியல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story