போலீஸ் தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தென்மேற்கு ரெயில்வே தகவல்


போலீஸ் தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2018 4:13 AM IST (Updated: 21 Aug 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

ராணிசென்னம்மா எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதத்தால் போலீஸ் தேர்வு எழுதாதவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தென்மேற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கடந்த 5-ந் தேதி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத வடகர்நாடகத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராணிசென்னம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூரு வந்தனர். இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக பெங்களூருவை வந்தடைந்ததால் அவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ரெயில் தாமதத்தால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். இந்த நிலையில் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி பெயர், விண்ணப்ப எண், பதிவுஎண், தேர்வு மையம் மற்றும் முகவரி, பயண தேதி, பி.என்.ஆர். எண், செல்போன் எண் ஆகியவற்றை கடிதமாக எழுதி, ரெயில் டிக்கெட் நகலை இணைத்து தபால் மூலம் கூடுதல் டி.ஜி.பி.(வேலைவாய்ப்பு அலுவலகம்) கார்ல்டன் ஹவுஸ், பேலஸ் ரோடு, பெங்களூரு என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தில் ரெயில் டிக்கெட் நகல் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது.

மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story