குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
வளவனூர் அருகே குற்ற சம்பவங்களை தடுக்க அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இயக்கி வைத்தார்.
வளவனூர்,
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே சிறுவந்தாடு கிராமத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்களும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக முக்கிய இடங்களில் புகார் பெட்டிகளும் அமைக்கப்பட்டது.
இந்த கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இயக்கி வைத்தார். தொடர்ந்து புகார் பெட்டியை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது சிறுவந்தாடு கிராமத்தில் பட்டுத்துணி உற்பத்தியில் 50-க்கும் மேற்பட்ட பட்டு உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இங்கு கோடிக்கணக்கான பணப்புழக்கம் உள்ளது. எனவே காவல்துறை சார்பில் இங்கு மக்கள் பாதுகாப்பை கருதி 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எதிர்காலத்தில் மக்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளை பொருத்து, தேவைக்கேற்ப கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்படும். மக்கள் புகார் கொடுக்க இனிமேல் போலீஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. தங்கள் கிராமத்தில் புகார் பெட்டி இருப்பதால் மக்கள் அந்த புகார் பெட்டியில் தங்கள் புகார்களை எழுதி போடலாம். வளவனூர் போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு காவலர் வாரத்தில் 2 நாட்கள் உங்கள் கிராமத்திற்கு வருவார், அவரிடம் புகார் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் போலீசாரின் செல்போன் எண்கள் இந்த கிராமத்தில் முக்கிய இடங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் மூலம் போலீசாரை மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார். இதேபோல் கலிஞ்சிக்குப்பம் கிராமத்திலும் புகார் பெட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சங்கரசுப்பிரமணியன், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story