ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 138 வீடுகள் அகற்றம்
பண்ருட்டியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 138 வீடுகளை சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் அகற்றினர்.
பண்ருட்டி,
பண்ருட்டியில் 242 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. மாளிகைமேடு, பண்ருட்டி, எல்.என்.புரம், ஏரிப்பாளையம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெற்று வந்த இந்த ஏரி தண்ணீர் இல்லாததால் வறண்டது. பின்னர் நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டினர். மேலும் சிலர் ஏரியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து ஆழ்துளை கிணறு அமைத்து நெல், கரும்பு, மரவள்ளி, சவுக்கு போன்றவைகளை பயிரிட்டு விவசாயம் செய்தனர்.
இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பண்ருட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து நேற்று பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவ ராமன், பாலமுருகன், நில அளவு துணை ஆய்வாளர் வீரமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர்கள் மோகன்ராம், கபிலன், தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு எல்.என்.புரம், மாளிகைமேடு, எம்.ஏரிப்பாளையம் பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 138 வீடுகளை இடித்து அகற்றினர். மேலும் ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்யப்பட்டிருந்த விவசாய பயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அப்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story