இந்து அமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை


இந்து அமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2018 4:44 AM IST (Updated: 21 Aug 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் இந்து அமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மும்பை,

பயங்கரவாத தடுப்பு படையினர், பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியை சேர்ந்த வைபவ் ராவுத் என்பவர் வீட்டில் இருந்து கடந்த 10-ந் தேதி வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்

இதுதொடர்பாக வைபர் ராவுத்தும், அவரது கூட்டாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தபோல்கர் மரணத்தில் தொடர்புடைய சச்சின் பிரகாஷ்ராவ் மற்றும் சிவசேனா முன்னாள் கவுன்சிலர் காந்த் பங்கர்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சனாதான் சான்ஸ்தா எனும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் அந்த அமைப்புக்கு தடை விதிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் அந்த அமைப்பு மீது அரசு நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சனாதான் சான்ஸ்தாவின் ஆதரவாளர்கள் தற்போது மராட்டியத்தை ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். இதன் காரணமாக தான் அந்த அமைப்பு மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இல்லையெனில் அவர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அந்த அமைப்பு கிட்டத்தட்ட 500 இளைஞர்களுக்கு தாக்குதல் நடத்த பயிற்சி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வெறும் சிப்பாய்களை கைது செய்து ஒன்றும் நடக்கப்போவது இல்லை. அந்த அமைப்பின் மகாகுரு(தலைவர்) இன்னும் வெளியில் தான் உள்ளார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story