அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 1–வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடிப்படை வசதிகள் செய்து தரகோரி 1–வது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 5–வது வார்டுக்குட்பட்ட சவுபாக்கியாநகர், 13–வது வார்டுக்குட்பட்ட அமர்ஜோதி சாமுண்டிநகர், 15–வது வார்டுக்குட்பட்ட மாரப்பக்கவுண்டர் லே–அவுட் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமையில் நேற்று 1–வது மண்டல அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதர கோரி மண்டல அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் 15 வேலம்பாளையம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, 5–வது வார்டுக்குட்பட்ட சவுபாக்யா நகரில் 500–க்கும் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கடந்த 15 நாட்களாக வீதிகளில் கழிவுநீர் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது.
இதேபோல் 13–வது வார்டுக்குட்பட்ட அமர்ஜோதி சாமுண்டி நகரில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுவதில்லை. 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் குழாய் அமைக்க வேண்டும். 15–வது வார்டுக்குட்பட்ட மாரப்பகவுண்டர் லே–அவுட் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.