திருப்பூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிசங்கிலி பறிப்பு


திருப்பூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிசங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2018 5:31 AM IST (Updated: 21 Aug 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலியை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி. இவருடைய மனைவி ரத்தினலட்சுமி (வயது 25). தையல்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோவைக்கு செல்வதற்காக அவருடைய மகள் கனிஷ்காவுடன் பூண்டி ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் 3 பேர் மோட்டார்சைக்கிளில் அவருடைய மொபட்டை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அங்கு ஆர்.வி.எஸ். கார்டன் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த 2 பேரில் ஒருவர் திடீரென ரத்தினலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரத்தினலட்சுமி திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுள்ளார்.

ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ரத்தினலட்சுமி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவருடைய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரம் ரோடு டி.பி.என். காலனி அருகே மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பிரவீனா ஆசிரியையிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். அப்போது பிரவீனா சங்கிலியை இறுக்கமாக பிடித்து கொண்டதால் சங்கிலி 2–ஆக அறுந்தது. இதனால் மர்ம ஆசாமிகள் சங்கிலியின் ஒரு பகுதியான 1½ பவுனுடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

திருப்பூர் ஊரக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரத்தினலட்சுமியிடம் சங்கிலியை பறித்து சென்றவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீனாவிடம் சங்கிலியை பறித்து சென்றவர்களை போலவே உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எனவே அந்த மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பூரில் அடுத்தடுத்த நாட்களில் பெண்களிடம் மர்ம ஆசாமிகள் சங்கிலியை பறித்து செல்லும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Next Story