பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பாணி கொடுப்பதற்காக முஸ்லிம்கள் ஆடுகளை வாங்க மேலப்பாளையம் சந்தையில் குவிந்தனர்.
நெல்லை,
பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பாணி கொடுப்பதற்காக முஸ்லிம்கள் ஆடுகளை வாங்க மேலப்பாளையம் சந்தையில் குவிந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.
ஆடுகள் விற்பனைதமிழகத்தில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் எட்டயபுரம், மணப்பாறை, மேலப்பாளையம் ஆகியவை பெரிய சந்தைகளாகும். இந்த சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிக அளவில் நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய சந்தையான மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை, செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும். பக்ரீத் பண்டிகை காலங்களில் செம்மறி ஆடுகள் அதிகமாக விற்பனையாகும். வெள்ளாடு கறியை விட செம்மறி ஆட்டுக்கறி தான் பிரியாணிக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் செம்மறி ஆட்டுக்கறியை பக்ரீத் பண்டிகை காலங்களில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுப்பது வழக்கம்.
குர்பாணி கொடுப்பதற்காக முஸ்லிம்கள் செம்மறி ஆடுகளை வாங்கி அறுத்து, தங்களுக்கு ஒரு பங்கு, உறவினர்களுக்கு ஒரு பங்கு எடுத்துவிட்டு மீதியை ஏழைகளுக்கு குர்பாணி கொடுக்க வேண்டும் என்பதால் மேலப்பாளையம் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்க வந்து இருந்தனர்.
போக்குவரத்து நெருக்கடிமேலப்பாளையம் சந்தைக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து நேற்று ஆடுகள் வந்து இருந்தன. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் வரையும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும் விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளின் தரம், எடை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். மேலப்பாளையம் சந்தையில் எங்கு பார்த்தாலும் ஆடுகளின் விற்பனையும், மக்களின் கூட்டமும் தான் தெரிந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் சந்தையில் ரூ1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி இருக்கும் என்று வியாபாரிகள் கூறினார்கள்.
தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வள்ளியூர், ஆலங்குளம், கன்னியாகுமரி, காயல்பட்டினம், ரகுமானியாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஆடுகளை வாங்கி லோடு ஆட்டோக்களில் ஏற்றிச் சென்றனர். சிலர் தங்களுடைய கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும் ஆடுகளை ஏற்றிச் சென்றனர். இதனால் மேலப்பாளையம் சந்தை பகுதியில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.