பச்சிளம் பெண் குழந்தை இறந்த விவகாரம்: பிரேத பரிசோதனை முடிவில் திடீர் திருப்பம்


பச்சிளம் பெண் குழந்தை இறந்த விவகாரம்: பிரேத பரிசோதனை முடிவில் திடீர் திருப்பம்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:30 AM IST (Updated: 21 Aug 2018 9:30 PM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே பிறந்து ஒரு மாதமான பச்சிளம் பெண் குழந்தை கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு நிலவியது. இதையடுத்து பிரேத பரிசோதனை முடிவில் திடீர் திருப்பமாக இயற்கை மரணம் என்பது தெரிய வந்தது.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே காட்டுபுதூரை அடுத்த புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் முத்து கணேசன் (வயது 23), செங்கல் சூளை தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (21).

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. இந்த நிலையில் லட்சுமிக்கு கடந்த மாதம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 19–ந் தேதி இரவு அந்த பச்சிளம் குழந்தை இறந்தது. அந்த குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் இடையே சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குமுதாவுக்கும், பூதப்பாண்டி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம்  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கருதி முத்து கணேசனையும், அவருடைய மனைவியையும் போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் திடீர் திருப்பமாக குழந்தையின் சாவில் மர்மம் இல்லை எனவும், அது இயற்கை மரணம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிடித்து வைத்திருந்த தம்பதியை விடுவித்தனர்.  இறந்த குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story