உய்யகொண்டான்– கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு


உய்யகொண்டான்– கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 21 Aug 2018 10:45 PM GMT (Updated: 21 Aug 2018 5:31 PM GMT)

உய்யகொண்டான், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

கள்ளப்பெரம்பூர்,

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த மாதம் 19–ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22–ந்தேதி தண்ணீர் வந்தடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து கல்லணைக்கால்வாய், கொள்ளிடம், வெண்ணாறு, காவிரியில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் ஒருபக்கம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் வறட்சியாக காணப்பட்டது.


இதையடுத்து தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையில் இருந்து உய்யகொண்டான்நீட்டிப்பு வாய்க்காலிலும், திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள பொய்யக்குடி ஏரியில் இருந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று, தண்ணீர் திறப்பதையும், வாய்க்கால்களில் தண்ணீர் வருவதையும் பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தண்ணீர் வரத்தின் அளவு குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜஸ்டின், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story