பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வக்கீல் கைது
கள்ளக்குறிச்சியில் உடல் கருகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகள் சீதா (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சீதாவும் செந்திலும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். பின்னர் பச்சைமுத்து என்பவரை சீதா 2-வதாக திருமணம் செய்து கொண்டு, அவருடனும் விவாகரத்து செய்து கொண்டார்.
இதையடுத்து சீதா, வாய்க்கால் மேட்டு தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்த வக்கீல் இமயவர்மன்(45) என்பவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு சீதா, தனது வீட்டின் பின்புறம் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த சீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அக்பர்பாஷா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் சீதா, விவாகரத்து வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வரும் நயினார்பாளையத்தை சேர்ந்த இமயவர்மனை அடிக்கடி சந்தித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவாகரத்து வழக்கு முடிந்ததும், இமயவர்மனிடம் சீதா குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இமயவர்மன் சீதாவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் அழைப்பை எடுக்காமல் சீதா வேறு ஒருவருடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இமயவர்மன், சீதாவிடம் இனி வேலைக்கும் வர வேண்டாம் என கூறியுள்ளார். இதில் மனமுடைந்த சீதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வக்கீல் இமயவர்மனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story