நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோட ஒரு மூட்டைக்கு ரூ.60 வசூல்


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோட ஒரு மூட்டைக்கு ரூ.60 வசூல்
x
தினத்தந்தி 22 Aug 2018 3:15 AM IST (Updated: 22 Aug 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோட ஒரு மூட்டைக்கு ரூ.60 வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு பகுதியில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் குறுவை சாகுபடி செய்திருந்தனர். அவை செழித்து வளர்ந்து, பல இடங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் அவர்கள், நெல்மூட்டைகளை வெகு தொலைவில் உள்ள விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு பணம் விரயமாகும். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் சேத்தியாத்தோப்பு பகுதியில் சி.சாத்தமங்கலம், குமாரக்குடி, மழவராயநல்லூர், வாக்கூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது அதில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கான தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக நெல் எடைபோட விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து சி.சாத்தமங்கலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், எனது வயலில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தேன். 40 கிலோ எடைகொண்ட ஒரு மூட்டைக்கு ரூ.640 முதல் ரூ.660 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. நான் 80 நெல் மூட்டைகளை கொண்டு வந்திருந்தேன். இந்த நெல்லை எடைபோடுவதற்காக ஒரு மூட்டைக்கு ரூ.60 வீதம் மொத்தம் 4800 ரூபாயை வாங்கிக்கொண்டனர். கடந்த ஆண்டு ஒரு மூட்டை நெல் எடைபோட ரூ.10 முதல் ரூ.15 வரை வசூலித்தனர். ஆனால் தற்போது ரூ.60 வசூலிப்பதால் என்னை போன்ற விவசாயிகள் பாதிக்கப்படுகிறோம். எனவே நெல் எடைபோட பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார். 

Next Story