ஆசிரியர் வீட்டில் திருடிய வழக்கில் ஏ.சி.மெக்கானிக் கைது


ஆசிரியர் வீட்டில் திருடிய வழக்கில் ஏ.சி.மெக்கானிக் கைது
x
தினத்தந்தி 22 Aug 2018 3:00 AM IST (Updated: 22 Aug 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் ஆசிரியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஏ.சி.மெக்கானிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 16 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

சிதம்பரம், 


சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவேட்களம் சகஜானந்தாதெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 53). இவர் பரிவிளாகம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமிரதன்பாரதி மேலவன்னியூர் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சுந்தர்ராஜன், லட்சுமிரதன்பாரதி ஆகியோர் தினந்தோறும் காலை வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டி, வாசலில் கிடக்கும் ஷூவில் சாவியை மறைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு சாவியை வாசலில் கிடக்கும் ‘ஷூ’வில் மறைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலைக்கு சென்று திரும்பிய சுந்தர்ராஜன் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது, அவைகளை காணவில்லை. திருட்டுபோன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் இதுபற்றி அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுந்தர்ராஜன் ‘ஷூ’வில் சாவியை மறைத்து வைப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் யாரோ, சாவியை எடுத்து, பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுந்தர்ராஜன் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் அதேபகுதியை சேர்ந்த அவரது உறவினரான அன்பழகன் மகன் சரண்ராஜ்(28) என்பவர் தான் ‘ஷூ’வில் இருந்த சாவியை எடுத்து நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருவேட்களம் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருந்த சரண்ராஜை போலீசார் பிடித்து அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுந்தர்ராஜன் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சரண்ராஜை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 16 பவுன் நகைகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட சரண்ராஜ் ஏ.சி.மெக்கானிக் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story