மது குடித்த 2 நண்பர்கள் மயங்கி விழுந்து சாவு
பண்ருட்டி அருகே மது குடித்த 2 நண்பர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மகிமைதாஸ் மகன் மகேஷ்(வயது 33).காங்கிரஸ் பிரமுகர். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்கிற கார்த்திக்(40) என்பவரும் நண்பர்கள் ஆவர்.
லாரி டிரைவர்களான 2 பேரும் நேற்று முன்தினம் மது குடிக்க விரும்பினர். அப்போது அதே பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற ஒருவரிடம், அவர்கள் மது வாங்கினார்கள். பின்னர் அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை அருகில் அமர்ந்து 2 பேரும் மது குடித்துக்கொண்டிருந்தனர்.
மது குடித்த சிறிது நேரத்திலேயே மகேசிற்கும், கார்த்திக்கும் அடுத்தடுத்து வாந்தி ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் அதே இடத்தில் மயங்கி விழுந்தனர். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே 2 பேரும் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் குடித்த மதுபாட்டில்களை கைப்பற்றினர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மகேசும், கார்த்திக்கும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாரேனும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
Related Tags :
Next Story