உடுமலையில் சிறுமி உள்பட 17 பேரை கடித்து குதறிய வெறிநாய்


உடுமலையில் சிறுமி உள்பட 17 பேரை கடித்து குதறிய வெறிநாய்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:30 AM IST (Updated: 22 Aug 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் சிறுமி உள்பட 17 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. நாய் கடிக்கு ஆளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருந்தாலும், கொசுத்தொல்லையும், நாய்களின் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடுமலையில் நாய்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால் பொதுமக்கள் படும் தொல்லை குறைந்தபாடில்லை. சாலைகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்னும் நாய்கள் சாலைகளில் தாறுமாறாக சுற்றித்திரிகின்றன. குப்பைகளில் இறைச்சி கழிவுகள் கிடைக்காத போது அருகில் உள்ள ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறி விடுகிறது. மேலும் குப்பைகளில் கிடக்கும் இறைச்சி கழிவுகளை கூட்டமாக நின்று தின்று கொண்டிருக்கும்போது அவைகளுக்குள் சண்டையிட்டு சாலையின் குறுக்கே பாய்கிறது. அப்போது இரு சக்கர வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. காலை நேரங்களில் பால் வாங்க தனியாக செல்பவர்களையும் நாய்கள் விடுவது இல்லை. அவர்களையும் கடித்து விடுகிறது.

பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவிகளையும் நாய்கள் விரட்டிச் சென்று கடிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் சைக்கிளுடன் கீழே விழுந்து விடுகிறார்கள். உடுமலை நகர் முழுவதும் சுற்றித்திரியும் வெறிநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை.

உடுமலை நகராட்சி 28-வது வார்டு பகுதியில் சிங்கப்பூர்நகர் தங்கம்மாள் ஓடை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அப்போது அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டும் பொதுமக்கள் மிரட்டுவதும் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதுமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென்று ரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த வெறிநாயிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த வெறிநாய் சிறுமி கவிநிதா (வயது 5), கணேஷ்(53) ஆயூப்(55) பாப்பாத்தி(50) உள்பட 17 பேரை தொடர்ச்சியாக கடித்து குதறியது. பின்னர் அந்த வெறிநாய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

வெறிநாய் கடியில் காயம் அடைந்த கவிநிதா, கணேஷ், ஆயூப், பாப்பாத்தி ஆகியோர் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற 13 பேரும் சிகிச்சைக்கு பின்பு வீடுகளுக்கு சென்றனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

உடுமலை நகராட்சி சிங்கப்பூர்நகர் மற்றும் தங்கம்மாள் ஓடை பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொந்தரவு அதிகளவில் இருந்து வந்தது. இவற்றை கட்டுப்படுத்தக் கோரி நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் வெறிநாய் ஒன்று 17 பேரை கடித்து குதறிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தில் பொதுமக்கள் வெறிநாய் கடிக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுத்து வெறிநாய்களை பிடித்து சென்று இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. மேலும் உடுமலை நகரின் மற்ற பகுதிகளிலும் இதே போன்று வெறி நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதுடன் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியும் வருகின்றது. எனவே நகரே நாய் மயமாகும் முன்பு அவற்றை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.

உடுமலையில் ஒரே நாளில் 17 பேரை வெறிநாய் கடித்து குதறி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story