வைகை அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


வைகை அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:15 AM IST (Updated: 22 Aug 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

வைகை பாசன பூர்வீக விவசாயிகள் கூட்டமைப்பு துணை தலைவர் பாலசுந்தரமூர்த்தி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

 வைகை அணை தற்போது அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டும் நிலையில் உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக வைகை பூர்வீக பாசன பழைய ஆயக்கட்டு பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. இப்பகுதியில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன.

குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் வற்றி விட்டன. எனவே தற்போது வைகை அணையில் தண்ணீர் உள்ளதால் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் உரிய காலத்தில் விவசாயம் செய்யவும், குடிநீர் ஆதாரம் பெருகவும் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதனை கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டில் உள்ள தடுப்பணை மூலம் காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைத்து காவிரியில் ஓடும் உபரி நீரை வறட்சி மாவட்டங்களாக கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016–17ம் ஆண்டில் சுமார் 2,500 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோல 2017–18ம் ஆண்டுக்குரிய காப்பீட்டு தொகையும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே இவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டங்கள்தோறும் விவசாயிகள் மாநாடு நடத்தி கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜாவும் இதுபற்றி பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசியுள்ளார். இதேபோல புதுக்கோட்டை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வல்லத்தரசுவும் இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்து நிதி ஒதுக்க வேண்டியுள்ளார். எனவே இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story