கேரளா நிவாரண நிதி தொடர்பான வரைவோலைகள் வழங்க முதல்–அமைச்சர் அலுவலகத்தில் ஒரு பிரிவு தொடக்கம்
கேரளா நிவாரண நிதி தொடர்பான வரைவோலைகள் வழங்க புதுச்சேரி முதல்–அமைச்சர் அலுவலகத்தில் ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்–அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கேரளா மாநில மழை வெள்ள நிவாரண நிதிக்காக என்னுடைய வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நிவாரண நிதி வழங்க தானாக முன்வந்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் வசதிகளை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் அலுவலகத்தில் கேரளா நிவாரண நிதி தொடர்பான வரைவோலைகளை வழங்க தனியாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்–அமைச்சர் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் செயல்படும். இந்த பிரிவில் முதுநிலை கணக்கு அதிகாரி தர்மாம்பாள், முதல்–அமைச்சரின் உதவி தனிச்செயலாளர் ஜெகஜோதி, துணை தாசில்தார்கள் ரவிபிரகாஷ், உலகநாதன் ஆகிய அலுவலர்கள் செயல்படுவார்கள்.
கேரளா நிவாரண நிதிக்காக வரைவோலை வழங்கும் போது தகுந்த ஒப்புகை சீட்டு உரிய நபர்களால் உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் நிவாரண தொகை இந்தியன் வங்கி, முதன்மை கிளை, புதுச்சேரி கணக்கு எண் 6665715089. IFSC:IDIB000P042. கணக்கின் பெயர்: கேரளா நிவாரண தொகை புதுச்சேரி என்ற பெயரில் சேமிக்கப்பட்டு கேரள நிர்வாகத்திற்கு நிவாரண தொகை அனுப்பப்படும். மேலும் இணைய தள வங்கிச் சேவை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் 0413–2334788, 9787735930 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் நன்கொடை வழங்குபவர்களுடன் முதல்–அமைச்சர் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.