நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது


நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 21 Aug 2018 10:00 PM GMT (Updated: 21 Aug 2018 9:35 PM GMT)

சேலத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த 35 பவுன் நகை மீட்கப்பட்டது.

சேலம், 


சேலம் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சேலம் வலசையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), 3 ரோடு பகுதியை சேர்ந்த சிவானந்தம்(30) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராணம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி அம்மாபேட்டையில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் புகுந்து 35 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி கொலுசு மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

மேலும் அவர்களில் கார்த்திக் தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள சுடுகாட்டில் 35 பவுன் நகையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததும், சிவானந்தம் வீட்டின் படிக்கட்டின் கீழே குழி தோண்டி 3 கிலோ வெள்ளி கொலுசுவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் வேறு ஏதாவது திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story