ரூ.3.18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அமைச்சர்கள், கேரளாவுக்கு அனுப்பினர்


ரூ.3.18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அமைச்சர்கள், கேரளாவுக்கு அனுப்பினர்
x
தினத்தந்தி 22 Aug 2018 4:21 AM IST (Updated: 22 Aug 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.

நாமக்கல், 


கேரளாவில் வரலாறு காணாத மழையினால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சார்பாக நிதிஉதவிகளும், அத்தியாவசிய பொருட்களும் சேகரிக்கப்பட்டு, கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக கேரள மாநிலத்திற்கு அனுப்புவதற்காக பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட 2 டன் அரிசி, 500 கிலோ சர்க்கரை, 1 டன் துவரம் பருப்பு, 100 கிலோ டீத்தூள், 1 டன் ரவை உள்ளிட்ட பொருட்கள் 600 பண்டல்களாக தயார் செய்யப்பட்டன. மொத்தமாக ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான இந்த நிவாரண பொருட்கள் லாரி மூலம் அனுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வெள்ள நிவாரண பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பள்ளிபாளையம் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாலச்சந்திரன், மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, தாசில்தார் ரகுநாதன் உள்பட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story