போலி ஆவணம் தயாரித்தவர் கைது போலீசார் நடவடிக்கை
எருமப்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போட்டு போலி ஆவணம் தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி,
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன்கள் சீனிவாசன், தமிழரசன். இவர்களில் சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் வேறு ஊர்களில் உள்ளனர்.
இந்த நிலையில் சீனிவாசனின் தம்பி தமிழரசன், தனது மகன் சரவணனுக்கு ( வயது 30), தனது அண்ணன் மற்றும் தனது சொத்துகளை எழுதி வைக்க முடிவு செய்தார். இதற்காக தமிழரசன் தனது அண்ணனின் இடத்திற்கு அனுபவ சான்று கேட்டு முட்டாஞ்செட்டி கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வனை அணுகினார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் அனுபவ சான்று தர மறுத்து விட்டார்.
இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த சின்னுசாமியின் மகன் அழகிரி (40) என்பவரை அணுகி அனுபவ சான்று வாங்கி தருமாறு தமிழரசன் கேட்டுள்ளார். இதற்கு ரூ.1,500-ஐ பெற்றுக்கொண்டு, அந்த சான்றிதழை வாங்கி தருவதாக அழகிரி கூறி உள்ளார். மேலும் அழகிரி, கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை தானே போட்டதுடன், கிராம நிர்வாக அலுவலரின் முத்திரையை வைத்து அனுபவ சான்றை போலியாக தயாரித்து தமிழரசனிடம் கொடுத்து விட்டதாக தெரிகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வன், எருமப்பட்டி போலீசில் இது தொடர்பாக புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் விசாரணை நடத்தினார். இதில், அழகிரி, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்தை போலியாக போட்டதுடன், போலியான அனுபவ சான்று ஆவணம் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அழகிரியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story