நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைப்பு


நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைப்பு
x
தினத்தந்தி 22 Aug 2018 4:59 AM IST (Updated: 22 Aug 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைக்கப்பட்டது. வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது.

மைசூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களாக தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டது. இதன்காரணமாக, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல கபினி அணையில் இருந்தும் அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 121.62 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 72,858 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 73,134 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,281.30 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 35,251 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 27,083 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்தும் நேற்று முன்தினம் வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும், காவிரி மற்றும் கபிலா ஆறுகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் குறுக்கே சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சிவனசமுத்திராவில் அமைந்துள்ள பரசுக்கி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பரசுக்கி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அங்குள்ள காவிரி ஆற்றிலும் இருகரையையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Next Story