திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 30 டன் பூக்கள்
கேரளாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால், திண்டுக்கல்லில் இருந்து 30 டன் பூக்கள் அனுப்பப்பட்டது.
முருகபவனம்,
இயற்கை எழில் கொஞ்சும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இம்மாநிலம் ஆறுகள், நீர்நிலைகள், தென்னை மரங்கள் என பசுமையாக காட்சியளிக்கும். இதனாலேயே இதனை கடவுளின் தேசம் என கூறுவர். இத்தகைய பெருமை பெற்ற கேரளாவில் மழை, வெள்ளம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
இதையொட்டி இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் மழை வெள்ளம் வடிந்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவுக்கு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து சுமார் 30 டன் பூக்கள் அனுப்பப்பட்டது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
பொதுவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மழை, வெள்ளம் காரணமாக பூ வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால் சுமார் 30 டன் பூக்கள் அனுப்பப்பட்டது.
இந்த பூக்கள், திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், ஆலப்புழா, கொல்லம் உள்ளிட்ட பகுதிகளை சென்றடையும். ஆனால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் உள்பட பல பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மார்க்கெட்டில் (கிலோ கணக்கில்) மல்லிகைப்பூ, கனகாம்பரம் தலா ரூ.400, முல்லை, காக்கரட்டான் தலா ரூ.350, பிச்சிப்பூ ரூ.200, ரோஜா ரூ.100, அரளி ரூ.80, கோழிக்கொண்டை ரூ.50, வாடாமல்லி ரூ.15 முதல் ரூ.20 வரையில் நேற்று விற்பனை ஆனது.
Related Tags :
Next Story