கங்கைகொண்டான் குளத்தின் கரையில் விரிசல் சரிசெய்யப்பட்டது விடிய விடிய சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்
கங்கைகொண்டான் குளத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் விடிய விடிய சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
கயத்தாறு,
கங்கைகொண்டான் குளத்தின் கரையில் விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் விடிய விடிய சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கரையில் விரிசல் சரிசெய்யப்பட்டு தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.
குளம் நிரம்பியது
கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பின. அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கங்கைகொண்டான் வழியாக பாயும் சிற்றாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கங்கைகொண்டான் குளம் நிரம்பி, கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த குளத்தின் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கரையில் விரிசல்
இதற்கிடையே கங்கைகொண்டான் குளத்தின் கரையின் ஒரு பகுதி வலுவிழந்து, விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயம் உருவானது. இதன் அருகில் ஏராளமான விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இதை கவனித்த கங்கைகொண்டான் ஆலடிபட்டி, அணைத்தலையூர், கைலாசபுரம், புங்கனூர் பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் எந்திரங்கள் மூலம் டிராக்டர்களில் மண் அள்ளி, கங்கைகொண்டான் குளத்தின் கரையில் வலுவிழந்த பகுதியை நிரப்பி பலப்படுத்தினர். இரவிலும் விடிய விடிய இந்த பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
நேற்று 2–வது நாளாக குளத்தின் கரையை பலப்படுத்தும் பணி நடந்தது. இதனால் குளம் உடைந்து தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மானூர் யூனியன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள், கங்கைகொண்டான் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குளத்தின் கரையை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story