சுரங்க பணிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காக கனிம அறக்கட்டளை செயல்படுகிறது
கடலூர் மாவட்டத்தில் சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காக கனிம அறக்கட்டளை செயல்படுவதாக கலெக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
கடலூர்,
சுரங்கப்பணிகளால் பாதிக்கப்படுகிற மக்களின் மேம்பாட்டுக்காக கனிம அறக்கட்டளை தொடங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2016–ம் ஆண்டு முதல் கனிம அறக்கட்டளை தொடங்கப்பட்ட கலெக்டரை தலைவராக கொண்டு செயல்படுகிறது.
இந்த மாவட்டத்தில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் கடந்த 12–1–2015–ந்தேதிக்கு முன்னர் பதிவு பெற்ற நிறுவனங்கள் தமிழக அரசுக்கு செலுத்தும் ராயல்டியில் 30 சதவீதத்தொகையும், அந்த தேதிக்குப்பிறகு பதிவு பெற்று சுரங்கப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு செலுத்தும் ராயல்டியில் 10 சதவீதமும் கனிம அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.
இந்த வகையில் கடலூர் மாவட்ட கனிம அறக்கட்டளையில் சுமார் 106 கோடி ரூபாய் உள்ளது. இந்த நிதி, சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட உள்ளது. அதாவது இந்த நிதியில் 60 சதவீதம் பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காகவும், 40 சதவீதம் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காகவும் செலவிடப்படும். சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்னென்ன மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்வதற்காக கலெக்டர் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கனிம அறக்கட்டளை முழுவீச்சில் இயங்குவதற்கு வசதியாக அறக்கட்டளையில் பணியாற்ற கணக்காளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தட்டச்சர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது தொடர்பாக கனிம அறக்கட்டளை தலைவரான கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கடலூர் மாவட்டத்தில் சுரங்கப்பணிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காக கனிம அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு தகுதிவாய்ந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் கணக்காளர் பணிக்கு பி.காம்., அல்லது எம்.காம். படிப்புடன் கணினி அனுபவம் வாய்ந்தவர்களும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டப்படிப்புடன் கணினி அனுபவம் உடையவர்களும், தட்டச்சர் பணிக்கு குறைந்த பட்சம் பிளஸ்–2 தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் முதுநிலை தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்களும் பதிவு பெற்ற மனித சக்தி சேவை நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களில் கணக்காளருக்கு மாத தொகுப்பூதியமாக 12 ஆயிரம் ரூபாயும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தட்டச்சர் பணிகளுக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். எனவே பதிவு பெற்ற நிறுவனங்கள் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 24–ந்தேதி மதியம் 12 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.