100 நாள் வேலை திட்டத்தில் சிவகங்கை முதலிடத்தில் உள்ளது, கலெக்டர் தகவல்
100 நாள் வேலை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு மாநிலத்திலேயே சிவகங்கை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கண்மாய் சீரமைப்பு பணிகள் மட்டுமின்றி, தற்போது அரசு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களையும் நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது. இதன்படி தனிநபர் நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல், வயல்வெளிகளில் வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், வரத்துக்கால்வாய் சீரமைத்தல் உள்பட பல்வேறு பணிகளையும் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இந்த பணிகள் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டப்பணிகளை கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும், வில்லியனேந்தல் ஊராட்சியில் முன்னோடி விவசாயி தங்களது விளைநிலங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு வரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:–
ஊரக வளர்ச்சி துறையின் மூலம் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 68 லட்சம் மனிதத்திறன் கொண்ட பணிகள் மேற்கொள்ள கணக்கெடுக்கப்பட்டு, அதில் இதுவரை 22 லட்சம் மனிதத்திறன் கொண்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மாநில அளவில் ஒப்பிடுகையில் 100 நாள் வேலை திட்டத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதற்காக 811 கிளஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.220 வரை ஊதியம் கிடைக்கும் வகையில் பணிகள் வழங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.