தஞ்சையில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பிடித்தது புகையால் பொதுமக்கள் அவதி


தஞ்சையில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பிடித்தது புகையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 23 Aug 2018 4:30 AM IST (Updated: 22 Aug 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பிடித்ததால் புகை மண்டலத்தினால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கு 28 ஏக்கர் பரப்பரளவை கொண்டது. மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த குப்பைக்கிடங்கிற்கு தான் தினமும் கொண்டு வரப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 120 டன் குப்பைகள் சேகரிக்கப்படும். குப்பைக்கிடங்கில் அதிக அளவு குப்பைகள் தேங்கி கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படும். அதுவும் குறிப்பாக ஆடி, ஆவணி மாதங்களில் அதிக முறை தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமாலை குப்பைக்கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள, மளவென பரவியதுடன் புகை மண்டலமாக காணப்பட்டது. குப்பைக்கிடங்கு அருகே அகழி கரையில் குடிசை வீடுகளில் வசித்து வரும் 25–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேலும் காற்று பலமாக வீசியதால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதி, பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழவாசல் பகுதிகளில் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.


சிலருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. குப்பைக்கிடங்கின் சுற்றுச்சுவர் ஒரு பகுதியில் இடிந்து விழுந்ததால் குப்பைகளில் பற்றி எரிந்த தீயானது சுவரை கடந்து, குப்பைக்கிடங்கை சுற்றி காய்ந்து கிடந்த செடிகளிலும் பற்றி எரிந்தது. இந்த விபத்து குறித்து தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தீயணைப்பு வண்டியில் தண்ணீர் தீர்த்துவிட்டதால் உடனே வாகனத்துடன் தீயணைப்பு நிலையத்திற்கு வீரர்கள் திரும்பி வந்துவிட்டனர். தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.

தீ விபத்து அடிக்கடி நடந்தாலும் யாராவது தீ வைத்து கொளுத்துகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற விவரம் மட்டும் இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story