பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி பலத்த பாதுகாப்புடன் நடந்தது


பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி பலத்த பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 23 Aug 2018 4:45 AM IST (Updated: 23 Aug 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் பஸ் நிறுத்தத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.

இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் 2 டிபன் பாக்சுகளில் 5 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த கந்தசாமி மகன் கலைவாணன் (வயது30) என்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி எருக்கூர் கிராமத்தில் உள்ள ஒரு திடலில் பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்தது.

அப்போது திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர் குணசேகரன் தலைமையில் 4 போலீசாரை கொண்ட குழுவினர் வெடி குண்டுகள் இருந்த டிபன் பாக்சுகளை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, அவற்றை செயலிழக்க செய்தனர். இந்த வெடிகுண்டுகளை எதற்காக மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்தனர்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story