கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் 5 ஆண்டுகளாக அரைகுறையாக காட்சியளிக்கும் மேம்பாலம்


கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் 5 ஆண்டுகளாக அரைகுறையாக காட்சியளிக்கும் மேம்பாலம்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:00 AM IST (Updated: 23 Aug 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் 5 ஆண்டுகளாக அரைகுறையாக மேம்பாலம் காட்சியளிக்கிறது. எனவே பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிங்காநல்லூர்,

கோவை சிங்காநல்லூர் அருகே எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, நேதாஜி நகர், சக்தி நகர், காவேரி நகர், ராமசாமி நகர் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான வீடுகள் இருக்கின்றன. இந்த குடியிருப்புகளுக்கு செல்ல பிரதான சாலையாக இருப்பது விமான நிலைய சாலை.

அதாவது திருச்சி ரோட்டில் இருந்து இடது புறம் பிரிந்து செல்லும் இந்த சாலை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி வழியாக கோவை விமான நிலையம் செல்கிறது. இந்த ரோட்டில் தண்டவாளம் குறுக்கிடுவதாலும், ரெயில்கள் வரும்போது அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

எனவே அங்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டது. எனவே கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் 30–ந் தேதி பணிகள் தொடங்கின. இதையடுத்து பணிகள் மிக வேகமாக நடந்து வந்தது. சுமார் 70 சதவீத பணிகளும் முடிந்தன. ஆனால் சேவை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படவில்லை.

இதற்கு அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் 25–ந் தேதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:–

மேம்பாலம் அமைக்கும் சாலையில் இந்திய உணவு கழக அலுவலகம் உள்ளது. மேம்பாலத்தின் இருபுறத்திலும் சேவை சாலை அமைக்க இந்திய உணவு கழகத்திடம் இருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் தனியாருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்த வில்லை. சேவை சாலை அமைக்காமலேயே பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் எங்கள் பகுதிக்கு செல்ல முடியாது.

அத்துடன் நிலம் கையகப்படுத்தும்போது இழப்பீடு தொகை குறித்து சரியாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இது குறித்து நாங்கள் கேட்டபோது யாருமே சரியான பதிலை கூறவில்லை. எனவேதான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய இழப்பீடு வழங்காமல் பணியை தொடரக்கூடாது என்று உத்தரவிட்டார். இதனால் பணி அப்படியே நிறுத்தப்பட்டது.

சேவை சாலை அமைக்க கையகப்படுத்த உள்ள நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால் யாருமே அதை கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மேம்பால பணி நடக்காமல் அப்படியே கிடக்கிறது. அங்குள்ள கம்பிகள் அனைத்தும் துருபிடித்து இருப்பதால் இந்த மேம்பால பணி நடந்தாலும், அந்த கம்பிகளை வைத்து பணி செய்தால் கண்டிப்பாக உடைந்து விழும்.

மேம்பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் முடிவடைந்து இருப்பதால், அதற்கு குறைந்தது ரூ.12 கோடி செலவாகி இருக்கும். அந்த பணம் அனைத்தும் வீண்தானே. அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் பணிகள் முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். கலெக்டர் உள்பட எந்த அதிகாரிகளுமே எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில்தான் அவர்கள் குறிக்கோளாக இருந்து வருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக மேம்பாலம் அரைகுறையாக காட்சியளிப்பதால், அதன் அருகே உள்ள வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. முறையான இழப்பீடு தொகை கொடுத்தால் சேவை சாலை அமைக்க நாங்கள் நிலம் கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனாலும் அதிகாரிகள் எவ்வித பதிலும் சொல்ல மறுக்கிறார்கள்.

இந்த மேம்பாலம் தொடங்கும் இடத்தில் பள்ளி உள்ளது. இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தண்டவாளம் இருக்கிறது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றாலும் 5 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story