மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் அரியவகை பிணந்தின்னி கழுகுகள் இருப்பது கண்டுபிடிப்பு
கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் அரிய வகையை சேர்ந்த பிணந்தின்னி கழுகுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை,
கோவை கோட்ட வனப்பகுதி 670 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு பரந்து விரிந்து உள்ளது. இந்த வனப்பகுதியை எளிதாக கண்காணிக்கும் வகையில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, காட்டு யானை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கோவை வனச்சரக பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து வனச்சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதிகளில் புலிகள் உள்ளன. குறிப்பாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்தில்தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதுபோன்று கோவை கோட்ட வனப்பகுதியில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகங்களும் இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் கழுதைப்புலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வனப்பகுதியில் இறந்து போன வனவிலங்குகளை சாப்பிட்டு வாழும் அரியவகையை சேர்ந்த பிணந்தின்னி கழுகுகள் நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே இருந்தன. தற்போது இந்த பிணந்தின்னி கழுகுகள் கோவை கோட்டத்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் பார்த்து உள்ளனர். இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரன் கூறியதாவது:–
பிணந்தின்னி கழுகுகளுக்கு நீண்ட கழுத்து இருக்கும். அதன் தலைப்பகுதியில் முடிகள் இருக்காது. வெண் முதுகு கழுகு, கருங்கழுத்து கழுகு மற்றும் செந்தலை கழுகு ஆகிய 3 வகையான பிணந்தின்னி கழுகுகள் உள்ளன. இந்த கழுகுகள் வனப்பகுதியில் உயர்ந்த மலைப்பகுதியில் கூடுகள் கட்டி வாழும். வனப்பகுதியில் இறந்து கிடக்கும் வனவிலங்குகளை சாப்பிட்டு வாழும். எலும்புகளை கூட மீதம் வைக்காது.
இந்த கழுகுகள் சிறகை விரித்து இருக்கும்போது 7 அடி அகலமும், தலையில் இருந்து வால் வரை 3 அடி நீளமும் இருக்கும். இந்த இனத்தை சேர்ந்த கழுகுகள் தமிழகத்தில் அதிகமாக இருந்தன. ஆனால் அவை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது மிகக்குறைந்த அளவில் மட்டுமே இருக்கிறது. இருந்தபோதிலும் சிறுமுகை மற்றும் அதை ஒட்டி உள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் வெண் முதுகு மற்றும் செந்தலை பிணந்தின்னி கழுகுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் கூறியதாவது:– கடந்த 1960–ம் ஆண்டு வரை பிணந்தின்னி கழுகுகள் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் கூட இருந்தது. குறிப்பாக குப்பைமேடு பகுதிகளில் கூட்டம்கூட்டமாக இருந்ததை காண முடிந்தது. கால்நடைகளுக்கு வலிநிவாரண மருந்தை (டைக்னோபினாக்) கொடுக்கப்பட்டது. இந்த மருந்து கால்நடைகளுக்கு சிறந்தது என்றாலும், அதன் உடலில் விஷத்தை பரப்பும் தன்மை கொண்டது.
எனவே இறந்துபோன கால்நடைகளை பிணந்தின்னி கழுகுகள் சாப்பிட்டதால், அதன் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கொத்துக்கொத்தாக இறந்து விட்டன. பின்னர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில்தான் இந்த விஷயம் தெரியவந்தது. எனவே அந்த மருந்தை கால்நடைகளுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் அந்த மருந்தை விற்பனை செய்ய தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, தெங்குமரஹாடா, மசினகுடி ஆகிய பகுதிகளில்தான் பிணந்தின்னி கழுகுகள் காணப்பட்டன. தற்போது கோவை கோட்ட வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் இருக்கிறது. இந்த பகுதியில் 10–க்கும் மேற்பட்ட வெண் முதுகு பிணந்தின்னி கழுகுகளும், 5–க்கும் மேற்பட்ட செந்தலை பிணந்தின்னி கழுகுகளும் இருக்கிறது.
பெரும்பாலும் செந்தலை பிணந்தின்னி கழுகுகள் இருப்பது மிகவும் அரிதானது ஆகும். ஆனால் அவை சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே இந்த வகையான கழுகுகளை வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பார்த்து, புகைப்படங்களும் எடுத்து உள்ளனர். இந்த வகை பிணந்தின்னி கழுகுகளை பாதுகாப்பது நமது கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.