மணல் கடத்திய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் 2 பேர் கைது
செய்யாறு அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு,
செய்யாறு ஆற்றில் தொடர்ந்து லாரிகளில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனை தடுக்க கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அத்தி கிராம எல்லையை ஒட்டியுள்ள செய்யாறு ஆற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்று மணலை தோண்டி 4 லாரிகளில் ஏற்றிக்கொண்டிருப்பதாக அனக்காவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் மணல் கடத்தல் கும்பல் அதிவேகமாக 4 லாரிகளை எடுத்து கொண்டு தப்பி ஓடினர். தொடர்ந்து விரட்டிச் சென்ற போலீசார் மணலுடன் இருந்த ஒரு லாரி மற்றும் மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தை மடிக்கி பிடித்தனர்.
இது தொடர்பாக அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் வழக்குப் பதிவு செய்து டிரைவர்களான தண்டரை கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் (வயது 27), பெரியவேளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (28) ஆகிய இருவரையும் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தினை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்த சீனுவாசன் மற்றும் சிக்காமல் தப்பிய 3 லாரிகள், அதன் டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story