விளைநிலங்களுக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் வனத்துறையினர் அதிர்ச்சி
தேவாரம் பகுதியில் விளைநிலங்களுக்குள் 2 காட்டுயானைகள் புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேவாரம்,
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டுயானை கடந்த நான்கு ஆண்டுகளாக இங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இந்த காட்டுயானை தாக்கி 7 பேர் பலியாகினர். இந்த யானையை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் வனஅலுவலர்கள் காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்காக கோவை மாவட்டம், டாப்சிலீப்பில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. கடந்த சில தினங்களாக தேவாரத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் கும்கி யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இந்த கும்கி யானைகளை மலையடிவாரத்தில் காட்டுயானை வந்து சென்ற வழித்தடத்தில் சிறிது தூரம் அழைத்து சென்று ஒத்திகை மேற்கொண்டனர். மாவட்ட உதவி வனஅலுவலர் மகேந்திரன், உத்தமபாளையம் வனஅலுவலர் ஜீவனா ஆகியோர் தலைமையில் சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து காட்டுயானையின் வழித்தடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கும்கி யானைகள் வந்து தங்கியதை தொடர்ந்து ஒற்றை காட்டுயானை கேரள வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கடந்த சில நாட்களாக கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால், காட்டுயானையை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தேவாரத்தில் தனியார் தோட்டத்தில் தங்க வைத்திருந்த கும்கி யானைகளை ஊருக்குள் கொண்டு வந்து தங்க வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரள வனப்பகுதியில் இருந்த ஒற்றை காட்டுயானை, மற்றொரு யானையுடன் தேவாரம் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து மரவள்ளிக்கிழங்கு மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்று இருப்பது தெரியவந்தது. இதை பார்த்த விவசாயிகளும், வனத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது 2 காட்டுயானைகளும் வனப்பகுதியில் எள்ளுபாறை என்னுமிடத்தில் நிற்பதாக தெரியவந்துள்ளது.
2 காட்டுயானைகள் இருப்பதால் கும்கி யானைகளை வைத்து அவற்றை விரட்டும் பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story