முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 23 Aug 2018 3:15 AM IST (Updated: 23 Aug 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாயில் பாசனத்துக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி,


தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், போடி தாலுகாவுக்கு உட்பட்ட சுமார் 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 21 கண்மாய்கள், போடி தாலுகாவில் 23 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்கள் பயன்பெற்று வந்தன. இந்த கால்வாய் கூடலூர் அருகே லோயர்கேம்ப் பெரியாறு மின் உற்பத்தி நிலையம் அருகில் தலைமதகு பகுதியில் தொடங்கி தேவாரம் சுத்தகங்கை ஓடை வரை அமைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் இந்த கால்வாயை சுத்தகங்கை ஓடையில் இருந்து தேவாரம், பொட்டிப்புரம் வழியாக போடி கூவலிங்க ஆறு வரை சுமார் 14.10 கிலோமீட்டர் நீளத்துக்கு நீட்டிப்பு செய்யும் திட்டப் பணிகள் தொடங்கின. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் தற்போது நிறைவு அடைந்துள்ளன. இந்த நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் 6 குளங்களில் நிரம்பும். அதன் மூலம் 946.16 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். அத்துடன், சுமார் 585 கிணறுகளில் நிலத்தடி நீர் செரிவூட்டப்படுவதால் 3 ஆயிரத்து 848 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். இந்த கால்வாயில் கடந்த 2016, 2017-ம் ஆண்டுகளில் தண்ணீர் திறக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

18-ம் கால்வாயில் அக்டோபர் 15-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால், 18-ம் கால்வாய் மற்றும் திட்டப்பணிகள் நீட்டிப்பு செய்யப்பட்ட பகுதிகளிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து 18-ம் கால்வாயில் இருந்து வினாடிக்கு 279 கன அடி வீதம் 9 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவும், நீட்டிப்பு பகுதிகளுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தலைமதகு பகுதியில் இருந்து 18-ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல், பி.டி.ஆர்.- தந்தை பெரியார் வாய்க்கால் மூலம் தேனி, உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட சுமார் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலிலும் அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கவேண்டும் என்று அரசாணை உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து இந்த வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இந்த வாய்க்காலிலும் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில் முல்லைப்பெரியாற்றில் இருந்து பி.டி.ஆர்.- தந்தை பெரியார் வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கால்வாய் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story