என்ஜினில் வலை சிக்கியதால் விபரீதம்: விசைப்படகு உரிமையாளர் கடலில் மூழ்கி பலி


என்ஜினில் வலை சிக்கியதால் விபரீதம்: விசைப்படகு உரிமையாளர் கடலில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 23 Aug 2018 4:15 AM IST (Updated: 23 Aug 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினில் சிக்கிய வலையை எடுக்க சென்ற போது விசைப்படகு உரிமையாளர் கடலில் மூழ்கி பலியானார்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து தினமும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை ஏராளமான மீனவர்கள் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 44) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அவரும், அதே பகுதியை சேர்ந்த விஜேந்திரன்(35), வேலாயுதம்(70), நித்தீஸ்வரன்(19) ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்தநிலையில் இவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகின் என்ஜின் இறக்கையில் வலை சிக்கியது. இதனால் படகு பழுதாகி நின்றது. என்ஜின் இறக்கையில் சிக்கியுள்ள வலையை எடுப்பதற்காக விசைப்படகு உரிமையாளர் செல்வராஜ் கடலில் குதித்துள்ளார்.

இந்தநிலையில் வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் கடலில் குதித்து இறக்கை இருக்கும் இடத்தில் பார்த்துள்ளனர். ஆனால் அங்கு செல்வராஜ் இல்லை. பின்னர் அருகில் தேடி பார்த்துள்ளனர். அப்போது செல்வராஜ் கடலில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் செல்வராஜின் உடலை மீட்டு, படகில் வைத்தனர். பின்னர் இதுகுறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த படகை ஜெகதாப்பட்டினம் கரைக்கு கொண்டு வந்தனர்.

செல்வராஜின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் கதறி அழுதனர். பின்னர் கடலோர காவல் குழுமத்தினர், செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடலில் மூழ்கி விசைப்படகு உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story