கொடைரோடு அருகே நடந்த மதுரை வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
கொடைரோடு அருகே மதுரை வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோட்டார்சைக்கிளில் போட்டி போட்டு சென்றதால் கொலை செய்தோம் என அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கொடைரோடு,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை செல்லூரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அந்த பகுதியில் புரோட்டா கடை வைத்துள்ளார். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 21) கருமாத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டார். இவருடைய நண்பர்கள் எல்லீஸ் நகர் பூபதி (21), ஆலங்குளம் நாகசூர்யா (21), செல்லூர் கேசவமூர்த்தி (22) ஆவர்.
கடந்த மே மாதம் 3-ந்தேதி கோவையில் பூபதியின் உறவினர் இல்ல திருமண விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள மோகன்ராஜ் உள்பட 4 பேரும் 2 மோட்டார்சைக்கிளில் கோவைக்கு சென்றனர். பின்னர் இரவு கோவையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர்.
அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் பொட்டிசெட்டிபட்டி பிரிவு என்ற இடத்தில் இரவு வந்தனர். அங்கு சிறுநீர் கழிப்பதற்கு சாலை ஓரமாக மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கையில் கத்தியுடன் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர். பின்னர் அந்த கும்பல் தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி மோகன்ராஜ் தரப்பினரை மிரட்டினர். இதையடுத்து அவர்கள் தப்பித்து ஓடினர். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மோகன்ராஜை பிடித்து அவரது நெஞ்சு, வயிற்றில் கத்தியால் குத்தினர். இதில், மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பிறகு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதையொட்டி நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணாகாந்தி, ரபீக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏட்டுகள் பாலமுருகன், முனிஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கொடைரோடு அருகே சோழவந்தான் பிரிவு என்ற இடத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி மகன் புலிக் குட்டி (22), கார்த்தி என்ற ஆப்பிள் கார்த்தி (22) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அந்த 2 பேரும், மோகன்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து புலிக்குட்டி, கார்த்தி ஆகியோரை அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மோகன்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், சம்பவத்தன்று மோகன்ராஜ் தரப்பினர் மோட்டார்சைக்கிளில் ரோட்டில் போட்டிபோட்டுக் கொண்டு வேகமாக சென்றதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாகவும், முன்விரோதம் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சூரியா என்பவர் செல்லூர் போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். இன்னொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story