திண்டுக்கல்லில் நடந்த தொழிலாளி கொலையில் 4 பேர் கைது


திண்டுக்கல்லில் நடந்த தொழிலாளி கொலையில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2018 3:30 AM IST (Updated: 23 Aug 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,


திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே உள்ள ராமர்பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் அர்ஜூன் (வயது 19). இவர் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4.45 மணிக்கு, பூக்கடையில் வேலை செய்துகொண்டு இருந்த அர்ஜூனை ஒரு கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த சுள்ளான் என்ற ரமேஷ் (22) என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, அர்ஜூனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் ரமேஷ், வேடப்பட்டியை சேர்ந்த சைமன்ராஜா (22), அருண் (22), பிரபு (23) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள இஸ்ரவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் குறித்து ரமேஷ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீசார் கூறியதாவது:-
ரமேசும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண்ணுடன், அர்ஜூனின் உறவினரான தமிழரசன் என்பவர் பேசியதால், அவரை ரமேஷ் தாக்கி உள்ளார். இதுகுறித்து தமிழரசன், அர்ஜூனிடம் கூறியுள்ளார். இதையடுத்து அர்ஜூன், ரமேசை அடித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அர்ஜூனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து ரமேஷ் அவருடைய நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் அர்ஜூனை கொலை செய்ய சம்மதித்துள்ளனர். பின்னர் அர்ஜூனின் நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக கண்காணித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி நேற்று முன்தினம் அர்ஜூனை கொலை செய்வதற்காக நாகல்நகர் ரவுண்டானா பகுதிக்கு ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். பின்னர் பூக்கடையில் இருந்த அவரை ஓட,ஓட துரத்திச்சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

Next Story