சாலையோரத்தில் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்
தலமலை வனப்பகுதியில் சாலையோரத்தில் கூட்டமாக காட்டு யானைகள் உலா வருகின்றன.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனசரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் செடி- கொடிகள், புற்கள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், மான்கள் சாலையோரத்தில் மேய்ந்தபடி சுற்றித்திரிகின்றன.
குறிப்பாக நேற்று தாளவாடி அருகே உள்ள தலமலையில் இருந்து காளிதிம்பம் செல்லும் சாலையோரத்தில் யானைக்கூட்டம் வந்தது. மேலும் அந்த யானைகள் சாலையோரத்தில் வளர்ந்து காணப்படும் மூங்கில் கிளைகளை துதிக்கையால் முறித்து தின்றது. இந்த யானைகளை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.
இதுகுறித்து தாளவாடி வனத்துறையினர் கூறுகையில், தாளவாடி அருகே தலமலை வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஏராளமான காட்டு யானைகள் உலாவருகின்றன. எனவே தலமலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மேலும் வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story