பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு


பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Aug 2018 10:30 PM GMT (Updated: 22 Aug 2018 10:13 PM GMT)

நாமக்கல்லில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்,

முஸ்லிம்களின் தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

நாமக்கல்லில் நேற்று காலையில் சேந்தமங்கலம் சாலையில் உள்ள பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் முன்பு முஸ்லிம்கள் கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தட்டாரத்தெரு, சேலம் ரோடு வழியாக ஈத்கா மைதானத்தை அடைந்தனர்.

அங்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனை பேட்டை பள்ளிவாசல் இமாம் சாதிக் நடத்தினார். பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக்நவீத் முன்னிலை வகித்தார். இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் சயீத் முஸ்தபா, முப்தி செரீப்கான் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கேரளாவில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும், மீண்டும் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் எனவும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையில் பங்கேற்றவர்கள் கேரளாவிற்கு நிதி உதவியும் செய்தனர். தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

இதேபோல் கோட்டை திப்புசுல்தான் பள்ளிவாசல், மாருதி நகர் பள்ளிவாசல் என நகர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தனர்.

இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

Next Story