மகளுக்கு சுமையாக இருக்க விரும்பாததால் வயதான தம்பதி வி‌ஷம் குடித்தனர்: கணவர் பரிதாபமாக இறந்தார்


மகளுக்கு சுமையாக இருக்க விரும்பாததால் வயதான தம்பதி வி‌ஷம் குடித்தனர்: கணவர் பரிதாபமாக இறந்தார்
x
தினத்தந்தி 23 Aug 2018 4:30 AM IST (Updated: 23 Aug 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் மகளுக்கு சுமையாக இருக்க விரும்பாததால் வயதான தம்பதி வி‌ஷம் குடித்தனர். இதில் கணவன் பரிதாபமாக இறந்தார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் மணவெளி திலிபன் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 80). பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மினி (74). இவர்களுடைய மகள் கோமதி(49). இவருக்கு திருமணம் நடைபெற்று கணவருடன் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தாமோதரன் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி பத்மினி சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர்கள் 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் தாமோதரன், பத்மினி ஆகியோரது அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோமதி அவர்களது அறையை திறந்து உள்ளே சென்றார். அங்கு தாமோதரன், பத்மினி ஆகியோர் வாயில் நுரைதள்ளிய படி மயங்கிய நிலையில் கட்டிலில் கிடந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோமதி அலறினார். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தாமோதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பத்மினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன்–மனைவி இருவரும் வயது முதிர்வு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். எனவே தனது மகளுக்கு சுமையாக இருக்க கூடாது என எண்ணி வி‌ஷம் குடித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story