நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளை 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம், சமுதாய மற்றும் பள்ளி கழிவறைகள் மற்றும் ஊரக இணைப்பு சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். இதில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சுந்தரவல்லி பேசியதாவது:–
ஊராட்சி பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வினியோகம் வழங்குவதை உறுதிப்படுத்தவும். தெருவிளக்கு எரிவதையும், பழுது ஏற்பட்டிருக்கும் கைப்பம்பு, சிறுமின்விசைப்பம்பு மற்றும் விசைப்பம்பு ஆகியவைகளை 24 மணி நேரத்துக்குள் சரி செய்யவேண்டும்.
மகளிர் சுகாதார வளாகம், சமுதாய கழிவறை மற்றும் பள்ளி கழிவறை பழுது பார்க்கவேண்டியிருப்பின் ஒரு வார காலத்துக்குள் பழுது நீக்கம் செய்து முடிக்கவும். கழிவறைகளை தூய்மையாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும்.
கிராம இணைப்பு சாலைகள் செப்பனிடவேண்டிய நிலையில் இருப்பதை சரிசெய்யவேண்டும். அடிப்படைவசதிகள் தொடர்பான கட்டுப்பாட்டு அறை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் 044–27665248 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.