புழல் சிறை காவலர்கள் குடியிருப்பில் இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை


புழல் சிறை காவலர்கள் குடியிருப்பில் இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2018 4:56 AM IST (Updated: 23 Aug 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

புழல் சிறை காவலர்கள் குடியிருப்பில் இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழலில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறைச்சாலை கண்டத்திலேயே மிகப் பெரியது. இங்கு தண்டனை கைதிகளுக்கு தனியாகவும், விசாரணை கைதிகளுக்கு தனியாகவும், பெண் கைதிகளுக்கு தனியாகவும் சிறைகள் உள்ளன.

இந்த சிறைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையை சுற்றி ராட்சத சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. சிறையையொட்டி சிறை காவலர்கள் குடியிருப்புகள் உள்ளன. சிறை காவலர்கள் வசிக்கும் குடியிருப்பை சுற்றியும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பாதுகாப்பான முறையில் இருந்து வந்தது.

புழல் சிறையில் இருந்து காவலர் குடியிருப்பு முடியும் வரை ஜி.என்.டி. சாலையோரமாக இருந்த குடியிருப்பின் சுற்றுச்சுவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 மீட்டர் வரை இடிந்து விழுந்தது. அது இதுவரை சீரமைக்கப்படவில்லை. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த வழியாக காவலர்கள் குடியிருப்புகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த வழியாக உள்ளே செல்லும் சிலர், கஞ்சா மற்றும் போதை பொருட்களை பந்து போல செய்து சிறையின் ராட்சத சுற்றுச்சுவரை தாண்டி வீசி வருகின்றனர். எனவே அப்பகுதிகளில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story