தீயில் கருகி மூதாட்டி சாவு
புதுச்சத்திரம் அருகே தீயில் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி,
புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 80). இவர் சம்பவத்தன்று இரவு மண்எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அந்த விளக்கு எதிர்பாராதவிதமாக கீழே சரிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த கல்யாணியின் சேலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்யாணியின் உறவினர் சுப்பிரமணியன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து கல்யாணியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.