சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்


சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:45 AM IST (Updated: 23 Aug 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. அங்கு மாணவ–மாணவிகள் ஆர்வமுடன் பாடம் கற்கின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும், கல்வி கற்பிக்கும் தரத்தை உயர்த்தும் வகையில், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்பட உள்ளது என்றும் அவர் கூறினார். இதற்காக மாதிரி பள்ளிகளுக்கு அரசு தலா ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த பள்ளியில், தரமான ஆய்வுக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், கண்காணிப்பு கேமராக்கள், தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி பள்ளி தொடக்க விழா கடந்த 15–ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளன.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வகுப்பில் மாணவிகள் 6 பேரும், மாணவர் ஒருவரும் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தரையில் பாய் விரித்து, அவர்களுடன் உட்கார்ந்து ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். கணக்கு, ஆங்கிலம் ஆகியவற்றை அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்று கொடுக்கிறார்கள்.

ஆணி மணிச்சட்டம் மூலம் கணக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. மாணவ–மாணவிகள் ஆர்வமுடன் பாடத்தை கற்று கொள்கின்றனர். வகுப்பு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:–

ஆகஸ்டு மாதம் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கண்டிப்பாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நன்றாக கற்பித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story