முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் அபாயம் பார்வையிட எடப்பாடி பழனிசாமி வருகிறார்


முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் அபாயம் பார்வையிட எடப்பாடி பழனிசாமி வருகிறார்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:45 AM IST (Updated: 24 Aug 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மேலும் சில மதகுகள் உடையும் அபாய நிலையில் உள்ளன. சீரமைப்பு பணிகளை பார்வையிட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகிறார்.

திருச்சி,

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது முக்கொம்பு சுற்றுலா மையம். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் முக்கொம்பு வரை அகண்ட காவிரியாக காட்சி அளிக்கும். முக்கொம்பில் காவிரி ஆறு காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது.

இதில் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து அனுப்புவதற்காக அணை கட்டப்பட்டு உள்ளது. இதற்கு கொள்ளிடம் அணைக்கட்டு என பெயர். காவிரியின் வேகத்தை குறைப்பதற்காகவும், வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாத்து பயிர் சாகுபடிக்கு தண்ணீரை பிரித்து அனுப்புவதற்கும் வசதியாக கொள்ளிடம் அணை கட்டப்பட்டது.

இந்த அணையை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதாவது 1836-ம் ஆண்டு பிரிட்டீஷ் ராணுவ பொறியாளரும், தென்னிந்திய நீர்மேலாண்மையின் தந்தை என போற்றப்பட்டவருமான சர். ஆர்தர் காட்டன் என்பவர் கட்டி உள்ளார். இந்த அணையின் நீளம் 630 மீட்டராகும். இந்த அணையில் உள்ள மொத்த மதகுகளின் எண்ணிக்கை 45. அணை மேல் பகுதி பாலத்தின் அகலம் 3 மீட்டர்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக வந்த உபரி நீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக முக்கொம்பு வழியாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த வாரம் முழுவதும் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக 182 ஆண்டு காலம் பழமையான கொள்ளிடம் மேலணையின் மதகுகள் பலவீனம் அடைந்தன.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் உள்ள 8 மதகுகள் திடீர் என இடிந்து விழுந்தன. இதனால் அணைக்கட்டின் மேல் பகுதி பாலமும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்தது. உடைந்த மதகுகள் சீறிப்பாய்ந்த தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

நேற்று காலை மேலும் ஒரு மதகு இடிந்து விழுந்தது. இதனால் அணையில் இடிந்த மதகுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

நேற்று காலை தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். முக்கொம்புக்கு வந்து அணையின் உடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனி செயலாளர் சாய்குமார் சென்னையில் இருந்து கார் மூலம் முக்கொம்புக்கு வந்தார். இடிந்து விழுந்த 9 மதகுகள் மற்றும் உடைந்த பகுதிகளின் வழியாக தண்ணீர் அடித்து செல்லப்படுவதை பார்வையிட்டார். பின்னர் அவர், உடைந்த அணையை சீரமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து அணையை தற்காலிகமாக சீரமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். முக்கொம்புக்கு சென்று கொள்ளிடம் அணையின் உடைந்த பகுதிகளை பார்வையிட்டு, அதனை விரைவாக சீரமைக்க எடுக்க வேண்டிய பணிகளையும் துரிதப்படுத்துகிறார்.

கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்து அணை இடிந்து விழுந்தாலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்படவில்லை. இதனால் விவசாய பணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படவில்லை. ஆனாலும் அணையில் மேலும் சில மதகுகளும் உடைந்து விழும் அபாய நிலையில் தான் உள்ளன. இதனால் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி முக்கொம்பில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முக்கொம்பில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும், அணையின் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளின் வழியாக கொள்ளிடத்தில் வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் விவசாய பணிகளுக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பே போதுமானது. ஆனாலும் விவசாய பணி முக்கியம் என்பதால் நாம் அதை விட கூடுதலாக கொடுத்து வருகிறோம்.

கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் இடிந்து விழுந்ததற்கு அதன் பழமைத்தன்மை மற்றும் வெள்ளப்பெருக்கே காரணம் ஆகும். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு மதகு ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. மணல் குவாரிகளால் அணையின் மதகுகள் இடிந்து விழவில்லை.

கொள்ளிடம் அணையின் இடிந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி ஒரு வார காலம் அல்லது 7 , 8 நாட்களுக்குள் முடிந்து விடும். இந்த பணியானது அணையின் மற்ற மதகுகளின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும், வடகிழக்கு பருவ மழையினால் பெரு வெள்ளம் ஏற்பட்டாலும் அதனையும் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும்.

அணையில் சுமார் 110 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த உடைப்பினை சரி செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான பொருட்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். கான்கிரீட் பில்லர், மணல் மூட்டைகள், பனை மரக்கட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் ஆகியவற்றின் மூலம் 3 அடுக்குகளாக இறக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் செய்யப்படும். தண்ணீருக்குள் இறங்கி சீரமைப்பு பணி செய்வதற்கான ராட்சத பொக்லைன் எந்திரங்கள் சென்னையில் இருந்து வரவழைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story