குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றதால் கூடுதல் வரதட்சணை கேட்ட என்ஜினீயர்


குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றதால் கூடுதல் வரதட்சணை கேட்ட என்ஜினீயர்
x
தினத்தந்தி 24 Aug 2018 3:00 AM IST (Updated: 24 Aug 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 31-ந்தேதி நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்றதால் என்ஜினீயர் ஒருவர் கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஸ்ரீமுஷ்ணம், 


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய என்ஜினீயருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர். இதற்கான நிச்சயதார்த்தம் வருகிற 31-ந் தேதி நடைபெற இருந்தது.

திருமணத்தின்போது இளம்பெண்ணுக்கு 30 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்குவதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர். அதற்கு என்ஜினீயர் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். நிச்சயதார்த்தத்தை சிறப்பாக நடத்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ் அடித்து உறவினர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒரு திருமண மண்டபத்தில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பணிகள் அனைத்தும் தடல்புடலாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் என்ஜினீயர், குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். எனவே என்ஜினீயர் திருமணத்தின்போது கூடுதலாக 70 பவுன் நகைகளும், ஒரு காரும் கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கறாராக கூறியுள்ளார்.

இதனால் இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து இரு குடும்பத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த என்ஜினீயர், தான் கேட்ட நகைகள் மற்றும் கார் கொடுத்தால் மட்டுமே அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன். இல்லையெனில் அவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறினார்.
அதற்கு அந்த பெண்ணின் பெற்றோர், குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டதால் திடீரென வரதட்சணையை கூடுதலாக கேட்பது நியாயம் இல்லை. ஏற்கனவே இரு வீட்டாரும் பேசியபடி நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் தருவதாக கூறினர்.

ஆனால் அதனை என்ஜினீயர் ஏற்றுக்கொள்ளாமல், நிச்சயதார்த்ததம் நடக்காது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவருடன் வந்தவர்களும் சென்றனர். இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story