ரூ.99-க்கு செல்போன் விற்பனை அறிவிப்பால் விடிய விடிய காத்திருந்த கூட்டம்


ரூ.99-க்கு செல்போன் விற்பனை அறிவிப்பால் விடிய விடிய காத்திருந்த கூட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2018 4:45 AM IST (Updated: 24 Aug 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் ஒரு செல்போன் கடை திறப்பு விழாவையொட்டி ரூ.99-க்கு செல்போன் விற்பனை என்று அறிவிக்கப்பட்டதால் விடிய, விடிய மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

காரைக்குடி,

அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப மனிதர்களும் இன்று ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீட்டில் இருக்கின்றதோ, இல்லையோ கண்டிப்பாக அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் கைகளிலும் செல்போன் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களோடு மக்களாக அவர்களின் வாழ்வில் இன்றியமையாத பொருளாக செல்போன் இருந்து வருகிறது.

இந்த மக்களை தங்களோடு இணைத்து வைத்திருப்பதற்காக பல்வேறு தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் ஏராளமான தள்ளுபடி சலுகைகளை அளித்து வருகின்றன. இதேபோல் காரைக்குடியில் நேற்று புதிதாக ஒரு தனியார் செல்போன் கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். தங்களது கடை திறப்பு விழாவில் முன்னதாக கலந்துகொள்ளும் 100 பேருக்கு ரூ.750 மதிப்புள்ள செல்போன் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தனர்.

இந்த அறிவிப்பையொட்டி காரைக்குடி, குன்றக்குடி, சாக்கோட்டை, புதுவயல், திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ரூ.99 செல்போனை வாங்குவதற்கு நேற்று அதிகாலை 2 மணி முதலே அந்த கடை அருகில் ஆண்கள், பெண்கள், முதியோர்கள், சிறுவர்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு கடை திறக்கப்பட்டது. முதலில் நின்ற 100 பேரிடம் ரூ.99-ஐ பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கி செல்போன் மற்றும் மரக்கன்றை வழங்கினர். அதன் பின்னரும் நீண்ட வரிசையில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்ததால் 100பேருக்கு பின்னால் வந்த 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.199-ஐ பெற்றுக்கொண்டு செல்போன் மற்றும் மரக்கன்றை வழங்கினர்.

ரூ.99 செல்போனுக்காக கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிப்பதற்காக அங்கு போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story