கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்படும் கலெக்டர் பேச்சு
பில்லமங்கலம் கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்படும் என மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கணேஷ் பேசினார்.
திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவிற்கு உட்பட்ட பில்லமங்கலம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். பின்னர், இதற்கு முன்பாக நடைபெற்ற முகாமில் தீர்வு காணப்பட்ட மனுதாரர்கள் 450 பேருக்கு ரூ.82 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் கலெக்டர் கணேஷ் பேசியதாவது:–
தமிழக அரசு, பொது மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை பெண்கள் பயனடைந்து உள்ளனர். முதியோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பில்லமங்கலம் கோவில் ஊரணி உடனடியாக சீரமைக்கப்படும். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் சுகாதாரத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின்–ஏ திரவம் வழங்கும் அரங்கு உள்பட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா, தோட்ட கலைத்துறை துணை இயக்குனர் அருணாசலம், தாசில்தார் ரமேஷ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.