வரையாடுகள் இனவிருத்தி மையமாக மாற்ற வனத்துறை திட்டம்
ஊட்டி மான் பூங்காவை, வரையாடுகள் இனவிருத்தி மையமாக மாற்ற வனத்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஊட்டி,
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஊட்டி படகு இல்லத்தின் எதிரே நீலகிரி மாவட்ட தெற்கு வனக்கோட்டம் சார்பில் கடந்த 1986-ம் ஆண்டு மான் பூங்கா அமைக்கப்பட்டது. பின்னர் அது, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கடந்த 1992-ம் ஆண்டு அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பூங்காவை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெளிநாட்டு பறவைகள் மான் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வந்தது.
பறவைகள் வெளியே பறந்து செல்லாமல் இருக்க பூங்காவின் மேற்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் வலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு சென்று கடமான்களையும், பறவைகளையும் கண்டு ரசித்ததுடன், மகிழ்ச்சியுடன் புகைப்படங்களும் எடுத்து சென்றனர். காலப்போக்கில் பூங்காவை சரிவர பராமரிக்காததால், அங்கிருந்த பறவைகள் இறந்து விட்டன. மேலும் தெரு நாய்கள் பூங்காவுக்குள் புகுந்து 4 கடமான்களை கடித்ததில் அவை பரிதாபமாக இறந்தன. இதையடுத்து பூங்காவை சுற்றிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், சுற்றுலா பயணிகள் செல்ல தடையும் விதிக்கப்பட்டது.
தற்போது மான் பூங்கா முதுமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வாழும் கடமான்கள் அடிப்பட்டாலோ அல்லது தெருநாய்கள் துரத்தி காயமடைந்து நடக்க முடியாமல் இருந்தாலோ அவை பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பூங்காவில் தற்போது 20-க்கும் மேற்பட்ட கடமான்கள் உள்ளன.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் ஊட்டி மான் பூங்காவை புதிய வடிவில் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பூங்காவை சுற்றிலும் பாதுகாப்புக்காக இரும்பால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
இந்த பூங்காவை அழிந்து வரும் வனவிலங்குகளில் ஒன்றான நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க இனவிருத்தி மையமாக மாற்ற வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்குருத்தி, கேரள மாநிலத்தையொட்டி உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதிகளில் வரையாடுகள் காணப்படுகிறது.
இந்த வரையாடுகள் அமைதியான பகுதிகளில் மலை பாறைகளை சார்ந்து வாழும். நீலகிரி மட்டுமில்லாமல் தேனியையொட்டி இடுக்கி மாவட்ட மலைப்பகுதிகளில் வரையாடுகள் உள்ளன. வேட்டையாடுவது, வறட்சி ஏற்படுவது, வனப்பகுதிகளின் பரப்பளவு குறைவது போன்ற காரணங்களால் வரையாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதனால் அழிந்து வரும் வரையாடுகளை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story