ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை,
கடலூர் மாவட்டம் கீரபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ரெங்கராஜை, அந்த மாவட்ட திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ் கடுமையாக பேசியதோடு அவரது பணியில் இருந்து விடுவிப்பு செய்து 5 மாதமாக வேறு ஊராட்சி ஒன்றியத்திற்கு மாறுதல் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் ஊதியமும் அவருக்கு கிடைக்காத காரணத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான ரெங்கராஜ் மாரடைப்பால் இறந்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் குளித்தலை வட்ட கிளைத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடலூர் திட்ட இயக்குனரின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.