ரவுடிகளின் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரணை


ரவுடிகளின் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 Aug 2018 3:00 AM IST (Updated: 24 Aug 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மீன் வியாபாரி கொலை தொடர்பாக ரவுடிகளின் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 33). பிரபல ரவுடியான இவர் சாரதா கல்லூரி சாலையில் மீன் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் மீன்களை வறுத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெங்கடேசனை வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், வெங்கடேசனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு வழக்கில் அழகாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு அழகாபுரத்தில் நடந்த ஒரு கொலையில் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கொலையுண்டவரின் உறவினர்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரின் உறவினர்கள் சிலர் ரவுடிகளுடன் சேர்ந்து பழிக்கு பழியாக வெங்கடேசனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

மேலும் வெங்கடேசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளுக்கும் இடையே கோஷ்டி மோதல் இருந்துள்ளது. இதன் காரணமாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக பெரியபுதூர் பகுதியை சேர்ந்த ரவுடிகளான அஜித்குமார், ராமு உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர்களின் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். கொலையில் ஈடுபட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story